வேள்ட் விஷன் லங்கா, ACTED, Save the Children ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சிவில் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (ECHO) நிதியுதவித் திட்டத்தினூடாக, 5,000 குடும்பங்களுக்கு உதவி.

SL Economic crisis response
Monday, March 20, 2023
  • மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, 4,200 குடும்பங்களுக்கு பல்நோக்கு அடிப்படையில்  நிதியுதவி.
  • 840 குடும்பங்களின் பாதுகாப்புக்கான உதவி
  • பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கின்ற செயல்பாட்டில், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு என்பன முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

சிவில் பாதுகாப்பு மற்றும், மனிதாபிமான உதவிகளுக்கான ஐரோப்பிய அமைப்பு (ECHO) மூலம் நிதியளிக்கப்படுகின்ற புதிய உதவித்திட்டத்தின் மூலம், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள், அவர்களுக்கான உயிர்காப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண உதவி மற்றும் பாதுகாப்பு ஆதரவைப் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

2022 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏழு மாதத் திட்டமானது, வவுனியா மற்றும் கிளிநொச்சி (வடக்கு மாகாணம்), நுவரெலியா (மத்திய மாகாணம்), பதுளை (ஊவா மாகாணம்) கொழும்பு மற்றும் கம்பஹா (மேற்கு மாகாணம்) ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைகின்றது என்பதோடு, இத்திட்டமானது, வேள்ட்  விஷன் லங்கா நிறுவனத்தினால், ACTED மற்றும் Save the Children ஆகிய நிறுவனங்களுடன் கூட்டாக  இணைந்து, செயல்படுத்தப்படுகின்றது.

" இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்படைந்தோருக்கான உடனடி உயிர்காப்பு மற்றும் பாதுகாப்புக்கான திட்டம்" என அழைக்கப்படும் இத்திட்டமானது, " இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான நிவாரணத்திட்டம் " எனவும் பெயர்பெறும்.

மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள  குடும்பங்களை துல்லியமாக அடையாளம் கண்டறிந்து கொள்ளவேண்டிய அவசியம் கருதி, 'குடும்பங்களின் அவசிய தேவைகளை மதிப்பீடு செய்தல்' என்ற  செயல்பாட்டு அடிப்படையிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த மதிப்பீடானது, இவர்களின்  உணவு, ஆரோக்கியம், பாதுகாப்பு, கல்வி மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது எந்த அளவுக்கு பாதிக்கச்செய்துள்ளது என்ற விபரங்களைத் தெளிவாகப் பெற்றுக்கொண்டு, அவரவர் தேவைகளுக்கேற்ப நிதித்தொகைகளை நிர்ணயித்து,  இவ்வுதவித்திட்டத்திற்கு வேண்டிய  நிதியை வரையறை செய்துகொள்வதற்கான  பரிசீலனைக்கும் வழிவகுக்கின்றது.

பண உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாது, இது தொடர்பில் பயனாளிகளுக்கு வழிகாட்டுதல்,  உள்ளூர் அரசாங்க அதிகாரிகளின் திறன்களை வலுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பணம் தொடர்பான தலையீடுகள் என்பவற்றினால் பயனாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கண்காணிக்க உதவுதல், மேலும் அதிகாரிகள் தமது சேவைகளில் பெற்றுக்கொண்ட  அனுபவங்களையும், அறிவினையும் பயனாளிகளுக்கு வழங்குதல் என்ற வகையிலும் இத்திட்டம் தனது  செயல்பாடுகளை விஸ்தரிக்கும்.

"இத்திட்டமானது, பொருளாதார ரீதியில் மோசமாக  பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பாரிய சவாலாக அமைந்துள்ள உணவுப்பாதுகாப்பு பிரச்சனைகள் மட்டுமன்றி, மருத்துவ சேவைகள், மருந்துகள்,  சிறுவர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளமை போன்ற, பொருளாதார நெருக்கடிகளின் அனைத்து  தாக்கங்களையும் கருத்தில் கொண்டு,  காலத்தின் தேவைக்கேற்ப அவசிய தருணத்தில் செயல்படுத்தப்படுகின்றது", என இத்திட்டத்திற்கான வேள்ட் விஷன் லங்காவின் திட்டத் தலைவர் இருதயம் மைக்கேல் கூறுகிறார்.

இந்தத் திட்டமானது, 4,200 குடும்பங்களைத் தெரிவு செய்து, 60,0000 நபர்களுக்கு பல்நோக்கு அடிப்படையில் நிதியுதவிகளை மேற்கொள்ளவுள்ளது.

மோசமான ஆபத்துநிலைகளிலுள்ள மேலும் 840  குடும்பங்களுக்கும் இந்நிறுவனம் அவர்களுக்குரிய  பாதுகாப்பு ஆதரவிற்கான பண உதவியினைப் பெற்றுக்கொடுக்கும் என்பதோடு, உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள், சமூகம்சார் நிறுவனங்கள், மகளிர் குழுக்கள் மற்றும் சிறுவர் பிரதிநிதிகள் என்ற சாரார்கள் உள்ளடங்கலான  குழுக்களின் வழிகாட்டலையும்,   கண்காணிப்பினையும் பயனாளிகள் தொடர்சியாகப் பெற்றுக்கொள்வதனையும், நிறுவனம் உறுதிப்படுத்திக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உதவி, இந்தக் குடும்பங்களின்  நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கும் 'பாதுகாப்பின்மை' என்ற  கவலையிருந்து மீண்டுகொள்ள  உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதன் பொருட்டு, இந்தக் குடும்பங்கள் தமக்கான அவசிய   தேவைகளை வரையறுத்து, முன்னுரிமை அடிப்படையில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய தீர்மானங்களை தாமே எடுப்பதற்கு  அதிகாரளிக்கப்படுவதால், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை குடும்பங்களிடையே பகிர்ந்தளிப்பதற்கு மாறாக, அவசர காலங்களில் பண உதவி செய்தல் என்பதே, பயனுள்ள, உடனடி உயிர்காக்கும் உதவி என நிரூபணமாகின்றது.

இந்த அணுகுமுறையானது, வங்கிக்கணக்கற்ற நபர்களை, குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில்  சேர்த்துக்கொள்வதன்மூலம் அவர்கள் வங்கிப் பரிவர்த்தனைகளில் தம்மை ஈடுபடுத்தி, நிதிச் சேவைகளை அணுகி அவை பற்றி அறிந்து கொள்ளவும் ஊக்குவிக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர், இலங்கையின் மிக மோசமான பொருளாதாரக் கொந்தளிப்பு அனைத்துத்  துறைகளையும்  சிதைத்துள்ள நிலையில், நீண்டகாலகட்டத்தில் தலைமுறைகளுக்கிடையே வறுமைநிலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கைத்தரங்கள் புரட்டிப்போடப்படுவதற்கு முன்,  சாத்தியமான உடனடி மனிதாபிமான உதவிக்கான அழைப்பாக இத்திட்டம் காணப்படுகின்றது.